contact@jayaom.com      +91 (044)-2484-1024

ஸ்ரீ ல ஸ்ரீ பரமஹம்ச ஓம்கார சுவாமிகள்

வாழ்க்கைச் சுருக்கம்

பாலப் பருவம்

பெற்றோர்கள்

தமிழ் நாட்டில், செங்கற்பட்டு மாவட்டத்தில் திருத்தணிகைக்கு மேற்கே பத்து மைல் தொலைவில் தும்மலசெருவு கண்டிரிகா எனும் கிராமத்தில் திரு.அஸ்தி வெங்கடராஜு, திருமதி.அஸ்தி சுப்பம்மா தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாக 10-06-1921-ம் ஆண்டு ஸ்ரீ ல ஸ்ரீ பரமஹம்ச ஓம்கார சுவாமிகள் அவதாரம் கொண்டார்கள். சுவாமிகளுக்கு செல்லமராஜூ என பெயரிட்டு சுவாமிகளிடம் மாறாத அன்பு கொண்டு அவரைப் பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.

பாலப் பருவம்

சிறுவயதில் சுவாமிகள் தமது பாட்டியாரிடம் மிகவும் ஒட்டுறவாக இருந்து வந்தார்கள். சிறுவர்கள், சிறுமிகளோடு விளையாடி மகிழும் சுவாமிகள், பெரியோர்கள் கொண்டாடும் திருவிழாப் போல், சிறுவர்களை ஒன்று சேர்த்து ஸ்ரீ இராமர் படத்தை அலங்கரித்து, ஊர்வலமாக வந்து விழா கொண்டாடி வந்தார்கள்.

கல்விப் பருவம்

நேரத்திற்கு முன்பே பள்ளிக்கு செல்வதில் சுவாமிகள் ஆர்வங் கொண்டிருந்தார்கள். சக மாணவர்களுடன் பள்ளிக்குக் குதுகுலத்தோடு சென்று வந்தார்கள். பள்ளியில் சாப்பாட்டின்போது தனது உணவை மற்ற மாணவர்களுக்கும் அன்புடன் பகிர்ந்தளித்துத் தானும் உண்டு மகிழ்வார்கள். சுவாமிகளுக்கு ஸ்ரீ இராமபிரானின் திருவுருவத்தைப் பார்த்துப் பரவசமடைய வேண்டுமென்ற பேரவா இருந்தது.

உயர்நிலைப் பள்ளி படிப்பு

திருத்தணிகை போர்டு உயர்நிலைப் பள்ளியில் நான்காவது படிவத்தில் சேர்ந்து சுவாமிகள் படிக்கத் தொடங்கினார்கள். தும்மலசெருவு கிராமத்திலுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சுவாமிகளிடம் அன்பு செலுத்தி பெரிதும் பாராட்டி வந்தனர். விடுமுறையின் போது கிராமத்திற்க்குச் சென்று கடவுளின் அதிசயத் தன்மைகளையும், சரித்திர உண்மைகளையும், பூததத்துவ நிகழ்ச்சிகளையும்,விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் விளக்கி பாமர மக்களின் அறிவை வளர்த்து வந்தார்கள்.

கல்லூரி படிப்பு

1939-ம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளநிலை இண்டர் வகுப்பில் சேர்ந்தார்கள். கல்லூரியில் சுவாமிகளுடன் நெருங்கிப்பழகிய இரு சக மாணவர்களுடன் தத்துவம் மற்றும் ஆத்ம கருத்துக்களை பரிமாறிக்கொண்டு குதூகலமடைந்து வந்தார்கள். தெய்வீக எண்ணங்கள் இயற்கையாகவே அவர்கள் உள்ளத்திலிருந்து தோன்றின. மக்களுக்கு தொண்டு புரிந்து அதன் மூலம் இன்பம் அடைவது சுவாமிக்கு இயற்கை சுபாவமாக இருந்தது. தயக்கமின்றி உணவு வாங்கி பசித்தவர்களுக்கு வழங்கி வந்தார்கள். கிராமத்திலிருந்து வருபவர்களுக்கு தேவையான அனைத்து உதவுகளைச் செய்வது சுவாமியின் வழக்கம்.1942-ம் ஆண்டில் சென்னை லயோலா கல்லூரியில் முதல் ஆண்டு பி.ஏ படித்தார்கள். விடுமுறை நாட்களில், சென்னை பிராட்வே அருகில் உள்ள சரஸ்வதி சங்கத்தில் தங்கி பிட்சுசாமிகளுடன் தொடர்பு கொண்டார்கள்.

உத்தியோக பருவமும் ஆத்மீக நாட்டமும்

1942-ஆம் ஆண்டு எம்.எஸ்.எம் ரயில்வே நிறுவனத்தினரால் நடத்தப்பட்ட நேர்முக பரீட்சையில் தேர்ந்தெடுக்கபட்டார்கள். மாலை வேலைகளில் திருத்தணிகை மலைக்கு அருகில் ஏழு ஊற்றுக்கள் இருந்த இடங்களுக்கு சென்று ஏகாந்தமாய் ஸ்ரீ ராம நாமத்தை ஒரு மணி நேரத்திற்கு மேல் உச்சரித்து கொண்டு வந்தார்கள். ஸ்ரீ ராம நாம ஜெபத்தின் போது சில சமயங்களில் இருதயத்திலிருந்து உண்மையின் தத்துவம் திடீரென தோன்றும், மறையும் சூரியன், மலை மற்றும் இயற்கைக் காட்சிகளை கண்ணார உற்று நோக்கி, களிப்படைந்து ஸ்ரீ ராம நாமத்தை சொல்லி வந்தார்கள். ஸ்ரீ ராம நாம ஜெபத்துடன் வேகமாக வீடு திரும்பி தன்னுள் தோன்றிய உண்மையின் தத்துவங்களை குறித்து வைத்துக் கொள்வார்கள். 'ஓம்' என்று துவங்கி 'பரமாத்மன்' என்று எழுதி அதன் கீழ் 'ஞானோதயம்' என்று குறித்து பிறகு தத்துவ உண்மைகளை எல்லாம் எழுதி கடைசியில் 'ஓம்' என்று முடிப்பார்கள்.

1943-ல் திருப்பதி தேவஸ்தான பொக்கிஷ அலுவலகத்தில் ஒரு எழுத்தாளராக சுவாமிகள் நியமிக்கபட்டார்கள். இவ்வேலையை ஏற்ற பிறகும், சுவாமிகள் தினந்தோறும் ஒரு மைலுக்கு மேல் உலாவுவதையும், ஏகாந்தமாய் அமர்ந்து ஸ்ரீ ராம நாம ஜெபம் செய்வதையும் பழகி வந்தார்கள். ஆத்மஞான வளர்ச்சிக்காகவே ஸ்ரீ ராமபிரான் தன்னை திருப்பதியில் தங்க அருள் செய்தான் என்ற எண்ணம் சுவாமிகளுக்கு பேரின்பம் ஊட்டியது.

சென்னையில் அஞ்சல் துறையில் ஊழியம்

சென்னை மாகாண அஞ்சல் அதிகாரியிடமிருந்து பொது அஞ்சல் அலுவகத் தொகுதியில் பதவியேற்க ஒரு கடிதம் 24-06-1943 அன்று கிடைக்கப் பெற்றது. அதன்படி பார்க்டவுனில் உள்ள பொது அஞ்சலகத்தின் சார்ட்டிங் அலுவலகத்தில் 'சார்ட்டராக' சுவாமிகள் நியமிக்கப் பட்டார்கள். அக்காலங்களில் தினமும் ஒரு மைலுக்கு மேல் நடப்பதும் கடற்கரையிலோ அல்லது பூங்காவிலோ அமர்ந்து ஸ்ரீ ராமா நாம ஜெபம் செய்து பழகி வந்தார்கள்.

படிப்பகம் ஏற்படுத்துதல்

சில ஆண்டுகள் சென்னை எடைப்பாளயத்தில் சுவாமிகள் குடியிருந்தபோது அத்தெரு வாசிகளும் மற்றவர்களும் ஒரு இலவசப் படிப்பகத்தை ஏற்படுத்தினார்கள். சில முக்கிய சஞ்சிகளை வரிசை வாரியாக சில சக ஊழியர்களைப் படிக்கச் செய்து, உலகச் செய்திகளைத் தெரிந்துக் கொள்ளும்படி அவர்களை ஊக்கப் படுத்தினார்கள். சுவாமிகள் சக ஊழியர்களிடம் நபர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் வசூல் செய்து முக்கிய சஞ்சிகைகளை வாங்கி எல்லோரும் முறையாகப் படிக்க வகை செய்தார்கள்.

ஏழைகளுக்கு உதவி

10-04-1946-ல் சென்னை R.M.S சார்ட்டிங் அலுவலகத்தில் 'ஏழை எளியவர்களுக்கான சகாய நிதி' என்ற ஓர் இயக்கத்தை உண்டாக்கினார்கள். அதன் மூலம் பசித்தோர்களுக்கு உணவளித்தல், ஆதரவற்றோர்களுக்கு நிதி உதவி, சிறுவர் சிறுமியர்களுக்கு படிப்பு போன்ற மேலும் பல நல்ல காரியங்களை செய்து வந்தணர். இயக்கத்திற்கு குழு அங்கத்தினர்களையும் தலைவர்களையும் அமைத்தார்கள்.சுவாமிகள் காரியதரிசியாகத் தேர்ந்தேடுப்பட்டார்கள். சார்ட்டர் பியூன்களிடம் மாதம் ஒரு அணா வீதம் வசூல் செய்து மேற்படி நிறுவனத்தின் மூலம் மக்களுக்கு சேவை செய்து வந்தார்கள். அலுவலகத்தில் கூட்டங்கள் நடத்தி மக்கள் முன்னேற்றத்திற்காக தன்னலமற்ற சேவை புரிய அவருடைய சக ஊழியர்களை ஊக்குவித்தார்கள்.

சத்குரு நாட்டம்

ஒரு சமயம் உயர்நீதி மன்ற கடற்கரையில் ஜெப சாதனையில் ஈடுபட்டிருக்கும்போது ஆண்டவனின் இயற்கையைப் பற்றியும், தோற்றத்தைப் பற்றியும், சுவாமிகளுக்கு அச்சமும் சந்தேகமும் ஏற்ப்பட்டன.சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு ஒரு குருவை அணுக வேண்டுமென்ற எண்ணம் சுவாமிகளுக்கு உதித்தது. ஒரு சமயம் சுவாமிகள் ரேணிகுண்டாவிற்கு சமீபத்தில் உள்ள பூடியில் உள்ள சிற்றப்பா வீட்டிற்கு சென்றார்கள். அன்று மாலையில் இரயில் நிலையத்தில் இரயில் நிலைய அதிகாரியுடன் சம்பாஷித்துக் கொண்டிருந்த ஒரு சாதுவை (ஸ்ரீ சாமிஷன்முகானந்தா) சுவாமிகள் சந்தித்தார்கள். அவர்களின் சம்பாஷனை மிகவும் உகந்ததாக இருந்ததுமல்லாமல், சுவாமிகளுக்கு வலிமையையும் ஆனந்தத்தையும் அளித்தது.தம்முடன் சிற்றப்பா வீட்டில் அன்றிரவு தங்குமாறு சாதுவை சுவாமிகள் கோரிக் கொண்டார்கள். அவ்வாறே சாதுவும் அன்றிரவு சுவாமிகளுடன் தங்கி அவருடைய கோரிக்கையைப் பூர்த்தி செய்தார்கள். மறுதினம் சாது,சுவாமிகளுடன் சென்னைக்கு வந்து சுவாமிகளுடன் தங்கினார்.

ஒரு பௌர்ணமி தினத்தன்று நடு இரவில் சென்னை உயர் நீதிமன்ற கடற்கரையில் சாது அவர்கள் சுவாமிகளுக்கு 'ஓம் ராமா' என்னும் ஜெப மந்திரத்தை விளக்கி உபதேசம் செய்தார்கள்.அதுமுதல் அச்சாது சுவாமிகளின் சத்குருவானார்கள். இதுவரையில் 'ராம' 'ராம' என்று ஜபித்து வந்த சுவாமிகள் குரு உபதேசத்திற்கு பிறகு, 'ஓம் ராமா' என்று ஜெபித்து வந்தார்கள்.

குருவானவர் சுவாமிகளுடன் சில நாட்கள் இடையர் பாளையத்தில் தங்கினார்கள். பிரதி தினமும் அதிகாலையில் குரு எழுந்து சுவாமிகளுடன் கடற்கரைக்குப் போகும்போது வழியில் உண்மையின் தத்துவங்களைப் பற்றி விளக்கம் செய்துக்கொண்டே போவார்கள். குருவுடனிருக்கையில் சுவாமிகள் பேரானந்தம் அடைவார்கள். சில சமயங்களில் குருவானவர் சுவாமிகளுடன் கோயில்களுக்குப் போகும்போது 'தன்னைத்தான் அறிதல் ' அல்லது 'நிவிகல்பசமாதி' வரை பல நிலைகளையும் பல்வேறு அனுபவங்களையும் சுவாமிகளுக்கு விளக்கி வந்தார்கள்.

ஒருநாள் திருவொற்றியூர் கோயிலில் சுவாமிகள் 'ஓம் ராமா' ஜெபம் செய்துக் கொண்டிருக்கையில் தம் கிராமத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட நபர் சுவாமிகளின் வீட்டிற்கு வந்திருப்பதாக ஒரு எண்ணம் உள்ளத்திலிருந்து உதயமாயிற்று. சுவாமிகள் திருவொற்றியூரிலிருந்து வீட்டிற்கு திரும்பியதும் மெய்யாகவே அந்தக் குறிப்பிட்ட நபர் அங்கிருப்பதைக் கண்டார்கள். சிற்சில சமயங்களில் புலன்களுக்கு எட்டாத காரியங்கள் நிகழ்வதிலிருந்து, 'பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா உயிர்களின் எல்லா செயல்களுக்குக் காரணம், எல்லாவற்றிலும் கடவுள் வியாப்பித்து ஒவ்வொரு ஜீவன் மூலம் குறிப்பிட்ட வகை வகையான காரியங்களை நிகத்துவதே' என்று சுவாமிகள் ஊகித்துக் கொண்டார்கள்.

ஸ்ரீ ராமபிரானின் காட்சி தோன்றுதல்

ஒரு குறிப்பிட்ட தினத்தில் இரவில் ஸ்ரீ ராமபிரானைத் தரிசிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் சுவாமிகளுக்கு உண்டாயிற்று. அதற்காக லீவு எடுத்துக் கொண்டு தம் கிராமத்திற்கு சென்றார்கள். அங்கு ஓர் அறையில் தினமும் பல மணி நேரம் ஜெப சாதனையில் ஈடுபட்டு வந்தார்கள். ஜனங்கள் அறைக்குள் நுழைந்து ஜெப சாதனைக்கு இடையூறு விளைவித்தார்கள். ஆகையால் ஐந்து நாட்களுக்குப் பிறகு, சுவாமிகளின் தமையனார் திரு.ராமராஜூ அவர்களின் ஆவடியிலுள்ள வீட்டில் மேலும் ஐந்து நாட்கள் வைராக்கியத்துடன் ஜெப சாதனை செய்வதற்காக சுவாமிகள் சென்றார்கள்.

ஆவடியில் ஐந்து நாட்கள் மிகவும் தீவிரமான ஜெப சாதனையை மேற்கொண்டார்கள். குறிப்பிட்ட நாள் இரவில் அறையில் ஜெப சாதனையில் ஈடுபட்டுக் கொண்ருந்தபோது ஸ்ரீராமரையும், சீதையையும், இலட்சுமணரையும், ஆஞ்சநேயரையும் சுவாமிகள் தரிசித்தார்கள்.

சுவாமிகள் லீவு முடிந்தவுடன் சென்னைக்கு வந்து வேலைக்கு சேர்ந்தார்கள். தினமும் தொடர்ந்து பல மணிநேரங்கள் இடைவிடாமல் ஜெப சாதனையில் ஈடுபட்டிருந்தார்கள். ஒருநாள் இரவு 11 மணிக்கு திருவொற்றியூர் மயானத்திற்குச் சென்று காலை 2 மணி வரை 'ஓம் ராமா' மந்திர ஜபம் செய்தார்கள். அந்நேரத்தில் ஸ்ரீ ராமர் தன் எதிரே நடந்து கொண்ட்டிறுக்கும் காட்சியைக் கண்டார்கள்.  குறுந்தகவல்

சுவாமிகளின் உண்மை பக்தர்களில் ஒருவரான திரு K.C. கண்ணப்ப முதலியார் என்பவர் சுவாமிகளுக்கு 'ஸ்ரீ பரமஹம்ச ஓங்கார சுவாமி' என்ற பெயரைச் சூட்டி, சுவாமிகளை புகழ்ந்து ஒரு பாடலை எழுதி, அச்சிட்டு ஞானோதய மன்றத்தில் குழுமியிருந்த எல்லோருக்கும் விநியோகம் செய்தார். அவ்வேளை முதல் சுவாமிகள் 'ஸ்ரீ பரமஹம்ச ஓங்கார சுவாமி' என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

  தெய்வீக கீதங்கள் [#5]

பாவண ராமா பரம தயாளா
தாரக ராமா நித்தியானந்தா
சீதா ராமா துஷ்ட சம்ஹாரா
ஜெய ஜெய ராமா கருணாநந்தா
ஹரே ஹரே ராம ஜோதி ஸ்வரூப
சற்குரு நாதா சச்சிதானந்தா

  தொடர்பு கொள்க
ஸ்ரீ பரமஹம்ச ஓம்கார சுவாமி மடம்

ஞானோதய ஆலயம் [கேந்திரம்],
பதிவு எண் : 73/2006,
Dr. சுப்பராயன் நகர்,
கோடம்பாக்கம், சென்னை - 600024.

+91 (044)-2484-1024 , +91 99405 88230
contact@jayaom.com
சேவை நேரம் 6:30AM - 7:30PM